உலக சைவ சமய மாநாடு 2, 3 சூன் 2012

மலேசிய சைவ சமயப் பேரவையின் முதலாம் உலக சைவ சமய  மாநாடு 2, 3 சூன் 2012

மலேசிய சைவ சமயப்  அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எதிர்வரும்  ஜூன் திங்கள் 2 மற்றும் 3 ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைபெறவிருக்கும் இம்மாநாடு ஈப்போ நகரில் சுங்கை பாரி சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் என்று மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார்.

 கருப்பொருள்

‘அனைவருக்கும் சைவ சமயக் கல்வி’ என்பதே இம்மாநாட்டின் கருப்பொருள் ஆகும். இக்கருப்பொருளின் அடிப்படையில் சைவ சமயம் உணர்த்தும் மெய்பொருள் உண்மைகளை விளக்கும் நோக்கில் மாநாட்டு உரைகள் அமையும். சைவ சமய மெய்ப்பொருள் உண்மைகளின் அடிப்படையில் சைவ அன்பர்கள் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பக்தி நெறியையும் பக்தி வாழ்வையும் மாநாட்டு உரைகள் விளக்கம் செய்யும்.

தமிழ் நாட்டின் சைவ ஆதினங்களின் குருமகா சந்நிதானங்களும் முன்னணிப் பேச்சாளர்களும் இம்மாநாட்டில் உரை நிகழ்த்த அழைக்கப்படவுள்ளனர். தவிரவும் உலகம் முழுவதும் உள்ள சைவ சமய இயக்கங்களின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். மலேசியாவின் தலைசிறந்த சைவ சமயப் பேச்சாளர்களும் மாநாட்டில் உரை நிகழ்த்துவர்.

 மாநாட்டில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள சைவ இந்துக்களும் சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரவேற்கப் படுகின்றனர்.

 ஆய்வு மலர்

மாநாட்டையொட்டி ஆய்வு மலர் ஒன்று வெளியிடப்படுகின்றது. ஆய்வு மலரில் சைவ சமய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெரும். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகளாவிய நிலையில் உள்ள சைவ சமய அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகமம், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் ஆகிய நூல்களின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். மேலும் சைவ சமய வரலாறு, சைவ சமயத்துக்குப் பாடாற்றிய சான்றோர்கள், இக்காலத்தில் சைவ சமயம் எதிர்நோக்கும் சிக்கல்கள், இவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகள் ஆகியவற்றைக் குறித்தும் ஆய்வாளர்கள் கட்டுரைகள் எழுதலாம்.

 ஆய்வுக் கட்டுரைகளில் தங்கள் கருத்துகளை முன் வைக்கும் ஆய்வாளர்கள் போதுமான தரவுகளை சைவ சமய ஆணை நூல்களிலிருந்தும் தகுதி வாய்ந்த பிற நூல்களிலிருந்தும் காட்ட வேண்டும். அல்லது கள ஆய்வுகள் வழி பெறப்பட்ட தரவுகளைக் கட்டுரையாளர்கள் முன் வைக்க வேண்டும். கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள், படங்கள் ஆகியவற்றையும் ஆய்வாளர்கள் உடன் அனுப்பி வைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கட்டுரைகளைப் பேரவையின் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் படியை அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

பேராளர் கட்டணம்

சமுகத்தின் எல்லாத் தரப்பினரும் மாநாட்டில் கலந்து கொள்ள  வாய்ப்பளிக்கும் பொருட்டு மாநாட்டுக் கட்டணம் மலேசிய ரிங்கிட் ஐம்பது என்று வைக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடு மட்டும் வெளியூர்ப் பேராளர்களுக்குத் தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தங்கும் வசதி வேண்டுவோர் அதற்கு விண்ணப்பம் செய்து விடுதிக் கட்டணமாக ரி.ம ஐம்பது செலுத்த வேண்டும்.  2 நாட்களுக்கான சிற்றுண்டி, உணவு, மாநாட்டு மலர் ஆகியன மாநாட்டுக் கட்டணத்தில் அடங்கும்.

 பதிவு

மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், ஆகியவற்றைக் குறிப்பிட்டு இப்பொழுதிருந்தே பதிவு செய்து கொள்ளலாம். சைவப் பேரவையின் மின்னஞ்சல் முகவரி அல்லது பேரவையின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் செய்யலாம். மின்னஞ்சல்: saivaperavai@gmail.com , பேரவை முகவரி: A 01-02 Palm Court, Jalan Berhala, 50740 Kuala Lumpur, Malaysia. மாநாட்டுக் கட்டணத்தைப் பேரவையின் வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம். வங்கிப் பற்றுச்சீட்டை மாநாட்டுப் பதிவு மையத்தில் காட்டிப் பேராளர் பதிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மாநாட்டு அன்று மாநாட்டுப் பதிவு மையத்திலும் கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.

பேரவையின் வங்கிக் கணக்கு விவரம்: Public Bank, 3166615004, Gabongan Pst. Pst. Pgt. Agama Saiva M’sia.

 சைவ இந்துக்களும், சைவ ஆர்வலர்களும் உடனே பதிவு செய்துகொள்ள வேண்டும். இட வசதியை முன்னிட்டுப் பேராளர் எண்ணிக்கை ஆயிரம் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். தமிழரின் மெய்ஞானக் கருவூலமான சைவ சமயத்தை அறிந்து பயன் பெற வருமாறு மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கேட்டுக் கொள்கிறார். 

பேராளர் பதிவு பாரம்:

தமிழ் : Peralar_Padivam_Tamil

 

 

 

 

Leave a Reply