பேரவை

மலேசியாவில், குறிப்பாகக் கோலாலம்பூரில் சைவ சமய அமைப்புகள் பல ஆக்ககரமாக இயங்கினாலும் அவரவரும் தங்களுக்குள் கட்டமைந்த உறுப்பினர் குழுவினரோடு மட்டும் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்புகள் அவரவர் மரபுப் பின்னணியில் இயங்கும் அதே வேளை ஒன்று கூடிச் செய்ய வேண்டிய பெருந்திட்டங்கள் பலவும் நமது சிந்தனைக்குள் இருந்தன. தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் கூட்டப்பட வேண்டிய மாநாடுகள், சைவ சமய ஆய்வு நூல்கள், சைவ சமயப் பொது நூலகம், சைவ சமயக் கல்லூரி போன்றவை தனி இயக்கத்தால் செய்யப்படுவதைக் காட்டிலும் கூடிச் செய்வதால் சைவ சமயத்திற்குப் பெருநலம் விளையும் என்று உணரப்பட்டது. மேலும் சமயத்தின் பேரால் நடைபெறும் நடைமுறைச் சீர்கேடுகள் தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கண்டித்து சைவ இந்துக்களை வழிநடத்தும் ஆற்றல் மிக்க சைவ சமயப் பீடமாகப் பொதுப் பேரவை காணும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நிறுவித் தலைவராக வழிநடத்தி வரும் சிவநெறி வாழ்க்கை மன்றம் மலேசிய சைவ சமயப் பேரவை அமைக்கும் திட்டத்தை முன் வைத்து 2001 செப்டம்பர் 16ஆம் நாள், பெட்டாலிங் ஜெயா தாமன் சிரீமஞ்சாவில் இருந்த அதன் அலுவலகத்தில் அமைப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

அக்கூட்டத்தில் சிவநெறி வாழ்க்கை மன்றம், மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம், சைவ நற்பணிக் கழகம், பன்னிரு திருமுறை வளர்ச்சி மையம், மலேசிய சைவ சித்தாந்த மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டனர். மலேசிய சைவ சமயப் பேரவை அமைய வேண்டும் என்று அனைவரும் ஒருமனதாய் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த சில வாரங்களில் சில அமைப்புகளைச் சார்ந்தோர் பின்வாங்கியதால் பேரவை அமைக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் மீண்டும் பேரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2010, ஏப்ரல் 16ஆம் நாள் மலேசிய சைவ சித்தாந்த மன்றத்தில் நடைபெற்ற அமைப்புக் கூட்டத்திற்குச் சிவநெறி வாழ்க்கை மன்றம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம், மலேசிய சைவ சித்தாந்த மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டு பேரவை அமைப்பை மறு உறுதிப்படுத்தினர்.

சைவ சமயத்தைப் பரப்பும் செயல்திட்டங்களைக் கொண்ட இயக்கங்கள், சைவ ஆகமப்படி பூசைகள் நிகழ்த்துகின்ற கோயில்கள் அனைத்தும் சைவ அமைப்புகளாக அமைப்புக் குழு ஒப்புக்கொண்டது.

Leave a Reply