saivaperavai@gmail.com 016-9691090

மலேசிய சைவ சமயப் பேரவை

பேரவை

மலேசியாவில், குறிப்பாகக் கோலாலம்பூரில் சைவ சமய அமைப்புகள் பல ஆக்ககரமாக இயங்கினாலும் அவரவரும் தங்களுக்குள் கட்டமைந்த உறுப்பினர் குழுவினரோடு மட்டும் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்புகள் அவரவர் மரபுப் பின்னணியில் இயங்கும் அதே வேளை ஒன்று கூடிச் செய்ய வேண்டிய பெருந்திட்டங்கள் பலவும் நமது சிந்தனைக்குள் இருந்தன. தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் கூட்டப்பட வேண்டிய மாநாடுகள், சைவ சமய ஆய்வு நூல்கள், சைவ சமயப் பொது நூலகம், சைவ சமயக் கல்லூரி போன்றவை தனி இயக்கத்தால் செய்யப்படுவதைக் காட்டிலும் கூடிச் செய்வதால் சைவ சமயத்திற்குப் பெருநலம் விளையும் என்று உணரப்பட்டது. மேலும் சமயத்தின் பேரால் நடைபெறும் நடைமுறைச் சீர்கேடுகள் தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கண்டித்து சைவ இந்துக்களை வழிநடத்தும் ஆற்றல் மிக்க சைவ சமயப் பீடமாகப் பொதுப் பேரவை காணும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நிறுவித் தலைவராக வழிநடத்தி வரும் சிவநெறி வாழ்க்கை மன்றம் மலேசிய சைவ சமயப் பேரவை அமைக்கும் திட்டத்தை முன் வைத்து 2001 செப்டம்பர் 16ஆம் நாள், பெட்டாலிங் ஜெயா தாமன் சிரீமஞ்சாவில் இருந்த அதன் அலுவலகத்தில் அமைப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அக்கூட்டத்தில் சிவநெறி வாழ்க்கை மன்றம், மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம், சைவ நற்பணிக் கழகம், பன்னிரு திருமுறை வளர்ச்சி மையம், மலேசிய சைவ சித்தாந்த மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டனர். மலேசிய சைவ சமயப் பேரவை அமைய வேண்டும் என்று அனைவரும் ஒருமனதாய் ஒப்புக் கொண்டனர். அடுத்த சில வாரங்களில் சில அமைப்புகளைச் சார்ந்தோர் பின்வாங்கியதால் பேரவை அமைக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் மீண்டும் பேரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2010, ஏப்ரல் 16ஆம் நாள் மலேசிய சைவ சித்தாந்த மன்றத்தில் நடைபெற்ற அமைப்புக் கூட்டத்திற்குச் சிவநெறி வாழ்க்கை மன்றம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம், மலேசிய சைவ சித்தாந்த மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டு பேரவை அமைப்பை மறு உறுதிப்படுத்தினர். சைவ சமயத்தைப் பரப்பும் செயல்திட்டங்களைக் கொண்ட இயக்கங்கள், சைவ ஆகமப்படி பூசைகள் நிகழ்த்துகின்ற கோயில்கள் அனைத்தும் சைவ அமைப்புகளாக அமைப்புக் குழு ஒப்புக்கொண்டது.

img

DR. NAGAPPAN ARUMUGAM

President

வரலாறு

மலேசிய சைவ சமயப் பேரவையின் முதல் அமைப்புக் கூட்டம் 2001ஆம் ஆண்டில் நடந்தது. கோலாலம்பூரில் இயங்கி வந்த சைவ சமய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர் பலர் இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சைவ சமய அமைப்புகளுக்கான பேரவை ஒன்று அமைவது காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்றுக் கொண்டனர். பேரவையின் கொள்கை, செயல்பாடுகள் பற்றிப் பல கலந்துரையாடல்களுக்குப் பின் 2011இல் பேரவை பதிவு பெற்றது. பேரவையின் திறப்பு விழா 2011 ஆகஸ்டு 14ஆம் நாள் பெட்டாலிங்ஜெயா சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 23வது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரி சுவாமிகளின் அருளுரையுடன் செயல்பட எழுந்தது. எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பேரவை, சைவ சமய அமைப்புகளை உறுப்பினராய்க் கொண்ட கூட்டமைப்பு.

நோக்கங்கள்

  1. சைவ சமயம் தனித்த பெருஞ் சமயம் என்ற உண்மையை உலகுக்கு உரத்துக் கூறுதல்.
  2. தமிழரின் அறிவார்ந்த சமயம் சைவ சமயமே என்ற உண்மையைப் பரப்புதல்.
  3. சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை உணர்த்துதல்.
  4. சைவ சமயத்தை இந்துக்களுக்கும் தமிழருக்குமான வாழ்க்கை முறையாகத் தேவாரம் திருவாசகம் கொண்டு பரப்புதல்.
  5. சைவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்துதல். பதின்ம வயதினருக்கான பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல். சைவ சமய மாத இதழ் நடத்துதல்.
  6. திருமுறையைப் பரப்பும் நோக்கில் வகுப்புகள், ஆய்வரங்குகள், போட்டிகள், விழாக்கள் நடத்துதல்.

நிறுவனர்

சைவ சமயப் பேரவை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து சைவ சமய ஆர்வலர் துணையுடன் வெற்றி கண்டவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம். முனைவர் ஐயா சைவ சித்தாந்தத் துறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் பக்தி இலக்கியம் உட்படப் பயின்று இளங்கலைப்பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத்தைச் சிறப்புப் பாடமாய்க் கற்று முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

பணிகள்

தமிழ்ப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆசிரியராகவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றி ஐம்பது வயதில் விருப்பு ஓய்வு பெற்று சைவ சமயத்தைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டார். மலேசிய இந்து சங்கத்தில் துணைமை, தலைமை பொறுப்புகள் ஆற்றியவர். சமயப் பரப்புரை செய்வதிலும் சக்தி என்னும் சமய இதழ் நடத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார். மலேசிய சைவ சமயப் பேரவையை அமைத்துப் செயலாற்றி வரும் ஐயா பேரவையின் ஆதரவு அமைப்பாக சைவத் திருக்கோயில் கலை, கல்வி அறவாரியத்தையும் (Yayasan Falsafah dan Institusi Saiva) அமைத்துள்ளார். சைவ சித்தாந்த மாணவர் பெருமக்களின் துணையுடன் ஏறத்தாழ 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பெற்றுள்ளது. இம்மனையில் ஆலவாய் அண்ணலுக்கு அழகிய திருக்கோயில் ஒன்று அமைப்பதுடன் தமிழ், மற்றும் சைவ சமய மேம்பட்டுக்கெனக் கல்விக் கழகம் ஒன்றும் அமைக்கப்படும்.

தொடர்பு

DR. NAGAPPAN ARUMUGAM

25-1 Viva Biz Avenue, 51200 Jalan Suppiah Pillay off Jalan Ipoh Kuala Lumpur

016-9691090

saivaperavai@gmail.com

நன்கொடை