வரலாறு

மலேசிய சைவ சமயப் பேரவையின் முதல் அமைப்புக் கூட்டம் 2001ஆம் ஆண்டில் நடந்தது. கோலாலம்பூரில் இயங்கி வந்த சைவ சமய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர் பலர் இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சைவ சமய அமைப்புகளுக்கான பேரவை ஒன்று அமைவது காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்றுக் கொண்டனர். பேரவையின் கொள்கை, செயல்பாடுகள் பற்றிப் பல கலந்துரையாடல்களுக்குப் பின் 2011இல் பேரவை பதிவு பெற்றது.


பேரவையின் திறப்பு விழா 2011 ஆகஸ்டு 14ஆம் நாள் பெட்டாலிங்ஜெயா சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 23வது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரி சுவாமிகளின் அருளுரையுடன் பேரவைச் செயல்பட எழுந்தது. எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பேரவை, பல சைவ சமய அமைப்புகளை உறுப்பினராய்க் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

நோக்கங்கள்

  • சைவ சமயம் தனித்த பெருஞ் சமயம் என்ற உண்மையை உலகுக்கு உரத்துக் கூறுதல்.
  • தமிழரின் அறிவார்ந்த சமயம் சைவ சமயமே என்ற உண்மையைப் பரப்புதல்.
  • சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை உணர்த்துதல்.
  • சைவ சமயத்தை இந்துக்களுக்கும் தமிழருக்குமான வாழ்க்கை முறையாகத் தேவாரம் திருவாசகம் கொண்டு பரப்புதல்.
  • சைவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்துதல். பதின்ம வயதினருக்கான பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல். சைவ சமய மாத இதழ் நடத்துதல்.
  • திருமுறையைப் பரப்பும் நோக்கில் வகுப்புகள், ஆய்வரங்குகள், போட்டிகள், விழாக்கள் நடத்துதல்

நிறுவனர் & பணிகள்

சைவ சமயப் பேரவை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து சைவ சமய ஆர்வலர் துணையுடன் வெற்றி கண்டவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம். முனைவர் ஐயா சைவ சித்தாந்தத் துறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் பக்தி இலக்கியம் உட்படப் பயின்று இளங்கலைப்பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத்தைச் சிறப்புப் பாடமாய்க் கற்று முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

 

தமிழ்ப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆசிரியராகவும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றி ஐம்பது வயதில் விருப்பு ஓய்வு பெற்று சைவ சமயத்தைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டார். மலேசிய இந்து சங்கத்தில் துணைமை, தலைமை பொறுப்புகள் ஆற்றியவர். சமயப் பரப்புரை செய்வதிலும் சக்தி என்னும் சமய இதழ் நடத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்.மலேசிய சைவ சமயப் பேரவையை அமைத்துச் செயலாற்றி வரும் ஐயா, பேரவையின் ஆதரவு அமைப்பாக சைவத் திருக்கோயில் கலை, கல்வி அறவாரியத்தையும் (Yayasan Falsafah dan Institusi Saiva) அமைத்துள்ளார். சைவ சித்தாந்த மாணவர் பெருமக்களின் துணையுடன் ஏறத்தாழ 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பெற்றுள்ளது. இம்மனையில் ஆலவாய் அண்ணலுக்கு அழகிய திருக்கோயில் ஒன்று அமைப்பதுடன் தமிழ், மற்றும் சைவ சமய மேம்பாட்டுக்கெனக் கல்விக் கழகம் ஒன்றும் அமைக்கப்படும்.